நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை குறி வைத்து தற்போது கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு ஒரு கிட்னியை மட்டும் விற்பனை செய்யுமாறு பேசி ஏமாற்றி கிட்னி பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இது குறித்து விசாரணையில் இறங்கினர். அந்த விசாரணையில் ஆனந்தன் என்பவர் கிட்னி விற்பனையில் இடைத் தரகராக செயல்பட்டது தெரிய வந்தது.
இவர்கள் தொழிலாளர்களை திருச்சி, பெரம்பலூர் மற்றும் கேரளா உள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கிட்னியை விற்பனை செய்ய வைத்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஆனந்தன் தற்போது தலைமறை வாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கும் நபர்கள் குறித்து தெரியவரும்.
அந்த தொழிலாளர்களிடம் 10 லட்சம் ரூபாய் வரை தருவதாக கூறி ஆசை காட்டிவிட்டு பின்னர் கிட்னி கொடுத்த பிறகு 2 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இதேபோன்று ஒரு பெண்ணுக்கும் ஆபரேஷன் செய்த நிலையில் 10 லட்ச ரூபாய் கொடுக்காமல் இரண்டு லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே தற்போது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலைவில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் வணிக நோக்கில் யார் இப்படி கிட்னி திருட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
