உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ அல்லது பரிமாறவோ தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.

​இந்தச் சூழலில், சில ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் அந்தப் பகுதிகளில் அசைவ உணவுகள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, புனித நகரமான அயோத்தியின் ஆன்மீகச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ஆன்லைன் டெலிவரிக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.