பீகார் மாநிலம் கத்சாதர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 24 வயது இளைஞர் திலீப் தாஸ், மே 16, 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான நான்கு மாதங்களில் அவரது மனைவி, கணவரை விட்டுவிட்டு தனது காதலனுடன் ஓடிவிட்டார். திலீப் தாஸ் சென்னையில் கூலி வேலை செய்கிறார். அவர் கூறுகையில், தனது மனைவி மூன்று மாதங்கள் மட்டுமே தனது வீட்டில் இருந்துவிட்டு, பின்னர் தனது பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், மனைவியின் தந்தை, திலீப் மீது தனது மகளை காணவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திலீப் தாஸ் தனது மனைவியை பலமுறை அழைத்து வர முயற்சித்தார், ஆனால் மனைவியின் குடும்பத்தினர் வீட்டில் அவரை சந்திக்கவோ, அவருடன் அனுப்பவோ அனுமதிக்கப்படவில்லை. அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். சமீபத்தில், அவர் ஒரு அறிமுகமில்லாத இளைஞருடன் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து, திலீப்புக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மனைவி ஏற்கனவே அந்த இளைஞருடன் காதல் வைத்திருந்ததாகவும், தனது மனைவியின் வீட்டில் இருந்தவர்களுக்கும் இந்த விவகாரம் தெரியும் என்று குற்றம் சாட்டியுள்ளார்

இந்த விவகாரத்தில் திலீப், ரஜோன் காவல் நிலையத்தில் புகார் அளித்து, நீதி கேட்டுள்ளார். அவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் 1.5 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்ததாகவும், அந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர் காதலனுடன் ஓடிவிட்டதாகவும் கூறுகிறார். காதலன் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. மறுபுறம், மனைவியின் தந்தை, திலீப் தனது மகளை கடத்திவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலைய அதிகாரி சந்திரதீப் குமார், புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.