தமிழக அரசியலில் கடந்த ஐந்து நாட்களில் மூன்று முக்கிய கட்சிகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பாமக கட்சியின் தலைவர் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று  (செப்.11) அதிரடியாக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியதன் பின்னணியில், ஏற்கனவே செப்.6 அன்று அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனும் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். அதனையடுத்து, செப்.8 அன்று மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

5 நாட்களில் மூன்று முக்கிய கட்சித் தலைவர்கள் நீக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதேசமயம் பல்வேறு அரசியல் கணிப்புகளையும் உருவாக்கியுள்ளது. அன்புமணி, செங்கோட்டையன், மல்லை சத்யா ஆகிய மூவரும் தனி கட்சி தொடங்கப்போகிறார்களா? அல்லது ஏதேனும் புதிய கூட்டணியில் இணைவார்களா? என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இவர்கள் எடுக்கும் அடுத்த அரசியல் நடவடிக்கைகள் தான் எதிர்கால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என வட்டாரங்களால் கணிக்கப்படுகின்றது.