தெற்கு தில்லியின் வசந்த் என்கிளேவ் பகுதியில், பொது இடத்தில் மது அருந்துவதைத் தடுத்த இந்திய ராணுவ பிரிகேடியர் மற்றும் அவரது மகன் மீது ஒரு கும்பல் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ராணுவ வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், பிரிகேடியர் பர்மிந்தர் சிங் அரோரா தனது வீட்டின் அருகே காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இருவரைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. அந்த நபர்கள் தங்கள் கூட்டாளிகளைத் தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளனர். தகவல் அறிந்து சில நிமிடங்களில் டாக்ஸி மற்றும் இதர வாகனங்களில் வந்த 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல், பிரிகேடியர் மற்றும் அவரது மகனைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியது.
SHAMEFUL CONDUCT BY DELHI POLICE
Last night (11 April), at around 10:00 PM, a serving Brigadier’s family encountered two individuals consuming alcohol inside their car (Regn No. DL3CCY 0789) near their residence in Vasant Enclave.
Upon objecting to this act of illegal public… pic.twitter.com/Q8ggSFHUAU
— Ashok Bijalwan अशोक बिजल्वाण 🇮🇳 (@AshTheWiz) April 12, 2026
பிரிகேடியரின் மகனைத் தரதரவென இழுத்துச் சென்ற கும்பல், அவரை கொடூரமாக தாக்கினர் =. தடுக்க வந்த பிரிகேடியரையும் அந்த கும்பல் தரக்குறைவாக நடத்தித் தாக்கியது. இச்சம்பவத்தின் போது அவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் பிரிகேடியரின் குடும்பத்தினரை வசைபாடியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து 112 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ரோந்துப் பிரிவு (PCR) வாகனம் அங்கு வந்தது. இருப்பினும், போலீஸார் முன்னிலையிலேயே அந்த கும்பல் தாக்குதலைத் தொடர்ந்ததாகவும், அங்கு வந்த காவலர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தை இந்திய ராணுவம் மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. இது குறித்து ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “ராணுவ அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தீவிரக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ராணுவக் காவல்துறையினர் அந்த அதிகாரிக்கு உதவப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தில்லி போலீஸார் விரைவாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்கப்பட்ட பிரிகேடியர் மற்றும் அவரது மகன் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்யத் தாமதம் செய்ததாகவும் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ள நிலையில், தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
