குஜராத் மாநிலம் உனா தாலுகாவிற்கு உட்பட்ட நவபந்தர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில், இரை தேடி வந்த ஆசிய சிங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் நிரம்பிய திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தச் சிங்கம் பத்திரமாக மீட்கப்பட்டது.

கிணற்றுக்குள் சிங்கம் விழுந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், சிங்கம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள், சிங்கத்தை மீட்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.

இந்த மீட்புப் பணி குறித்த வீடியோவை குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிங்கத்தின் உடலில் கயிறுகளைக் கட்டி, லாவகமாகப் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மேலேயிழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எவ்வித காயமுமின்றி சிங்கம் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட சிங்கம் உடனடியாகக் கூண்டில் அடைக்கப்பட்டு, ஜசந்தர் விலங்குகள் பராமரிப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிங்கம் வைக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினரின் இந்தத் துரித நடவடிக்கையையும், அவர்களுக்குத் தோள் கொடுத்த பொதுமக்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.