சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான மாலத்தீவு கடல் பரப்பிற்கு அடியில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான மர்ம குகைகள் நிறைந்துள்ளன. இந்த ஆபத்தான நீருக்கடி குகைகளின் ரகசியங்களை ஆராய்வதற்காக, இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ பால்கோன், அவரது மகள் ஜியோர்ஜியா உள்பட 4 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு படகு பயிற்றுநர் என 5 பேர் கொண்ட குழுவினர் மாலத்தீவு வந்திருந்தனர்.
அவர்கள் தலைநகர் மாலேயில் இருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ள ‘வாவூஅட்டோல்’ என்ற ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள இருண்ட குகைக்குள் நுழைந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட பயங்கர ராட்சத நீர்ச்சுழல் காரணமாக, அவர்களால் குகைக்குள் இருந்து வெளியேற முடியாமல் ஆழ்கடலிலேயே சிக்கிக்கொண்டனர்.
குகையின் ஆழமான பகுதியில் நிலவிய கடுமையான ஆக்சிஜன் நச்சுத்தன்மை காரணமாக, அவர்கள் ஐந்து பேரும் அடுத்தடுத்து மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்இதுவரை ஒரு சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீதமுள்ள உடல்களை மீட்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வானிலை சீரானதும் விரைவில் மீண்டும் மீட்புப் பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
