தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தமிழகத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகச் சட்டப்பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் ராஜ்யசபா தேர்தலை நடத்தும் அதிகாரியாகவும் (Returning Officer), இணைச் செயலாளர் உதவி தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

​இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலமும், அதிமுகவில் தம்பிதுரை மற்றும் தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைவதால், இந்த 6 இடங்களைக் கைப்பற்ற அரசியல் கட்சிகளிடையே இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது. மார்ச் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் கோட்டை வட்டாரம் இப்போதே பரபரப்பாகிவிட்டது