தமிழக அரசியல் களத்தில் புதிய தவெக அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், எழும்பூர் தனித் தொகுதியில் மாஸ் வெற்றி பெற்ற ராஜ்மோகன் விஷயத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் எடுத்த அதிரடி முடிவு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் வாயடைக்க வைத்துள்ளது.
எழும்பூர் தனித் தொகுதியில் ராஜ்மோகன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறைதான் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு, ‘தனித் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு ஏன் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்?’ என சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி விவாதங்களைக் கிளப்பினர்.
ஆனால், சாதியக் கணக்குகளைத் தகர்த்தெறிய நினைத்த முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான் வேறாக இருந்திருக்கிறது; விமர்சகர்களின் முகத்தில் கரியைப் பூசும் வகையில், ராஜ்மோகனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையைத் தூக்கிக் கொடுத்து முதலமைச்சர் விஜய் தனது பாணியில் நச்செனப் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவரின் இந்த முற்போக்கான மற்றும் புரட்சிகரமான இலாகா பங்கீடு, தற்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது.
