தமிழக அரசியல் களம் புதிய தவெக ஆட்சியின் அதிரடி நகர்வுகளால் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் மற்றும் அவருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று (மே 16) அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

இதில் யாரும் எதிர்பார்த்திராத மாஸ் ட்விஸ்ட்டாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது நேரட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் காவல் துறை, உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இமாலயத் துறைகளைத் தன் வசம் வைத்துள்ளார்.

அதாவது, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளான நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிநீர் விநியோகம் முதல் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS), ஐஎஃப்எஸ் (IFS) மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் வரையிலான ஒட்டுமொத்த பவர்களையும் முதல்வர் விஜய் தன் கையில் எடுத்துள்ளார்.

இதுமட்டுமன்றி பொது, சிறப்புத் திட்ட செயலாக்கம் மற்றும் சமூகத்தின் மிக முக்கிய அங்கங்களான மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் போன்ற மனிதநேயத் துறைகளையும் அவரே நேரடியாகக் கவனிக்க உள்ளார்.

ஒன்பது அமைச்சர்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கோட்டையின் மிக முக்கிய சாட்டையான ‘ஹோம் டிபார்ட்மென்ட்டை’ முதல்வர் விஜய் கையில் எடுத்திருப்பது, தமிழகத்தை ஒரு புதிய நிர்வாகப் பாதைக்குக் கொண்டு செல்லும் என தவெக தொண்டர்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்த மெகா இலாகா ஒதுக்கீடு கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.