மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தும், மம்தா பானர்ஜி பதவி விலக மறுப்பது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை, ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ள மம்தா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறிய அவர், ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும், மம்தா பானர்ஜி நினைத்தாலும் முதல்வராகத் தொடர முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டசபையில் பெரும்பான்மையை இழந்த ஒருவர் பதவியில் நீடிக்க முடியாது என்றும், பாஜக 207 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளதால் மம்தா அரசு செல்லுபடியாகாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விகாஷ் சிங் தெரிவித்துள்ளார். ஆளுநர் புதிய முதல்வருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த அடுத்த நிமிடம், மம்தாவின் பதவி தானாகவே காலியாகிவிடும் என்பதால், மேற்கு வங்கத்தில் அடுத்த சில நாட்களில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
