மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்குள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடந்த இந்தத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தன. மம்தா பானர்ஜி 4-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகப் போராடினார்.

ஆனால், அந்த மாநிலத்தில் ஒரு பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சாதனை படைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 77 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த முறை பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைத் தாண்டி 207 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த இமாலய வெற்றியையடுத்து, பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த வெற்றி மிகவும் உறுதியானது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் புகழ்ந்துள்ளார்.