தூய்மை நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் கர்நாடக மாநிலம் மைசூருவில், பொது இடங்களில் அநாகரிகமாகச் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் ஒரு வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள சுவர்கள், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களால் அசுத்தமடைந்து வந்தன. பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அபராதம் விதித்தும் பலன் அளிக்காத நிலையில், தற்போது அந்தச் சுவர்களில் ஆள் உயரத்திற்குப் பிரம்மாண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
Mirrors installed on walls to prevent people from urinating in Mysuru.
It’s crazy the things we need to do in India to enforce basic civic sense among adults. pic.twitter.com/48wSIa3LmY
— Deepak Bopanna (@dpkBopanna) May 6, 2026
இந்த நூதன முயற்சி குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வருபவர்கள், தங்களுக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியில் தங்களது உருவத்தையே பார்க்கும்போது ஒருவிதமான குற்ற உணர்வையும், வெட்கத்தையும் அடைவார்கள். இது அவர்களை அந்தச் செயலைச் செய்ய விடாமல் தடுக்கும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் அடிப்படை குடிமைப் பண்புகளை பெரியவர்களிடம் நிலைநாட்ட இது போன்ற வினோதமான முறைகளைக் கையாள வேண்டியிருப்பது வேதனைக்குரியது என்றாலும், இந்தத் திட்டத்திற்குச் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மைசூரு மாநகராட்சியின் இந்த ‘மிரர்’ ஐடியா மற்ற நகரங்களுக்கும் முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில இடங்களில் சுவர்களில் கடவுள் படங்களை வரைந்து வைக்கும் பழக்கம் இருந்த நிலையில், அதற்குப் மாற்றாக இந்தச் ‘சுய விழிப்புணர்வு’ கண்ணாடி முறை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
