மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) புதிய தலைவராக சசி சேகர் வேம்பதியை நியமித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிபிஎஃப்சி தலைவராக இருந்து வந்த பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, அண்மையில் பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காலியான தணிக்கை வாரியத் தலைவர் பதவிக்கு, பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) சசி சேகர் வேம்பதி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை ஐஐடி-யில் பயின்ற சசி சேகர் வேம்பதி, இந்தியாவின் ஊடகம் மற்றும் ஒலிபரப்புத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
கடந்த 2017 முதல் 2022 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். இந்தப் பொறுப்பை ஏற்ற மிக இளையவர் மற்றும் முதல் ஐஏஎஸ் அல்லாத அதிகாரி (Non-bureaucrat) என்ற பெருமையை இவர் பெற்றார். இவரது பணிக்காலத்தில் பொது ஒளிபரப்புத் துறையில் பல்வேறு நவீன மாற்றங்களையும், டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். தொழில்நுட்பம் மற்றும் பொது ஒளிபரப்புத் துறையில் இவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, கடந்த ஜனவரி 2026-ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
இந்தியாவில் பொதுவெளியில் திரையிடப்படும் திரைப்படங்களை முறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரு சட்டரீதியான அமைப்பு சிபிஎஃப்சி ஆகும். 1952-ஆம் ஆண்டு சினிமாடோகிராப் சட்டத்தின்படி, எந்தவொரு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக இந்த வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட ஒன்பது மண்டல அலுவலகங்கள் மூலம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. சசி சேகர் வேம்பதியின் தலைமையில் தணிக்கை வாரியம் புதிய பரிமாணத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
