ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ‘சூப்பர் ஓவர்’ அரங்கேறியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கே.கே.ஆர் வெற்றி பெற்றாலும், மைதானத்தில் கார்த்திக் தியாகி வீசிய 20-வது ஓவர் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த ஓவரில் கார்த்திக் தியாகி இடுப்புக்கு மேல் இரண்டு பீமர்களை (No Ball) வீசினார். வழக்கமாக இருமுறை பீமர்களை வீசும் பந்துவீச்சாளர் அந்த ஓவரைத் தொடர அனுமதி மறுக்கப்படுவார். இதனால் கேப்டன் அஜிங்கியா ரஹானே மாற்றுப் பந்துவீச்சாளரை அழைக்கத் தயாரானார். ஆனால், நடுவர்கள் தியாகியைத் தொடர்ந்து பந்துவீச அனுமதித்தனர்.
இது குறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே எம்.சி.சி (MCC) விதி 41.7-ன் படி விளக்கமளித்தார். நடுவர்களின் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள்:
வீசப்படும் அனைத்து பீமர்களும் அபாயகரமானவை என்று கருதப்படுவதில்லை. கார்த்திக் வீசிய முதல் பீமர் அபாயகரமானது எனக் கருதப்பட்டு அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இரண்டாவது பீமர் பேட்டருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக இல்லை என நடுவர்கள் கருதினர். இரண்டு பீமர்களில் ஒன்று மட்டுமே ‘அபாயகரமானது’ என நடுவர்கள் தீர்ப்பளித்ததால், தியாகி தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
இந்த விதியின்படி, இடுப்பு உயரத்திற்கு மேல் வரும் பந்துகள் ‘நோ பால்’ ஆகும். ஆனால், ஒரு பந்துவீச்சாளர் நீக்கப்பட வேண்டுமானால், அவர் வீசும் பந்து பேட்டருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் (வேகம் மற்றும் திசையை பொறுத்து) இருக்க வேண்டும். அத்தகைய அபாயகரமான பந்தை இரண்டாவது முறையாக வீசினால் மட்டுமே அவர் ஆட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்.
இறுதியில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணியின் முகுல் சவுத்ரி 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ‘ஆட்டநாயகன்’ விருதினை வென்றார்.
