லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ‘சூப்பர் ஓவர்’ முறையில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில், லக்னோ வீரர் மொஹ்சின் கானின் பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும், பொறுப்புடன் விளையாடிய ரிங்கு சிங், 51 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அணியை 155 ரன்களுக்கு இட்டுச் சென்றார். குறிப்பாக திக்வேஷ் ரதி வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஃபீல்டிங்கிலும் 4 கேட்சுகளைப் பிடித்து அசத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் ஆட்டம் சமனில் முடிந்ததை அடுத்து, வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. கொல்கத்தா கேப்டன் ரஹானே, அனுபவ வீரர் சுனில் நரைனிடம் பந்தைக் கொடுத்தார். நரைன் தனது மாயாஜால பந்துவீச்சால், நிக்கோலஸ் பூரன் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரை வெறும் 3 பந்துகளில் அடுத்தடுத்து வீழ்த்தி, லக்னோவை வெறும் 1 ரன்னில் சுருட்டினார். பின்னர் 2 ரன்கள் என்ற இலக்கை ரிங்கு சிங் பவுண்டரி அடித்து எட்டினார்.

வெற்றிக்குப் பிறகு மைதானத்தில் இருந்தே தனது தாய் மற்றும் சகோதரியுடன் ரிங்கு சிங் வீடியோ காலில் பேசினார். அப்போது அணியின் வெற்றிக்கு காரணமான சுனில் நரைனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரிங்குவின் சகோதரி நரைனைப் பார்த்து “ஹலோ பையா” அதாவது ‘அண்ணா’ என அழைத்தார்.

அதற்கு நரைன் சிரித்துக் கொண்டே, “பையா இல்லை.. பிரதர்!” என விளையாட்டாக பதிலளித்தார். ரிங்கு சிங் இதனை நரைனுக்கு மொழிபெயர்த்துக் கூற, அந்த வீரர் நெகிழ்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.