உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை எட்ட உள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டின் ரெட் சதுக்கத்திற்கு அருகில் உள்ள gostiny dvor மண்டபத்திற்கு வெளியே நேற்று தனது நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் “போரை ரஷ்யா தொடங்கவில்லை. மேற்கத்திய நாடுகளே தொடங்கியது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் மீதான  போரை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றும் உக்ரைன் நிலைமையை ‘ராணுவ சதி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு “ரஷ்யா போரை தவிர்க்க முயன்றது. ஆனால் மேற்கத்திய நாடுகளே இந்த தாக்குதலை விரும்பியது. குறிப்பாக அமெரிக்க தலைமையிலான நோட்டாதான் இதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் போரை தவிர்ப்பதற்கு ரஷ்யா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கிருமியாவை ஆக்கிரமிப்பதற்கு உக்ரைன் முயற்சி செய்து வருகின்றது. உக்ரைன் மக்களே மேற்கத்திய நாடுகளின் பணய கைதிகளாக மாறிவிட்டனர். மேலும் இந்த போரில் உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பது சாத்தியமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.