ரயில் பயணங்களைத் திட்டமிடும் முன், நீங்கள் எடுத்துச் செல்லும் சாமான்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எடை மற்றும் அளவுக்கான கட்டுப்பாடுகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்தியன் ரயில்வே ஒவ்வொரு வகுப்பு பயணிகளுக்கும் வெவ்வேறு எடை வரம்புகளை நிர்ணயித்துள்ளது.

பொதுப் பெட்டியில் பயணிகள் அதிகபட்சம் 35 கிலோ வரை சாமான்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ, ஏசி 3-ம் வகுப்பிலும் 40 கிலோ அனுமதி உண்டு. ஏசி 2-ம் வகுப்பில் 50 கிலோவும், ஏசி 1-ம் வகுப்பில் 70 கிலோ வரை சாமான்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சாமான்களின் அளவுக்கும் கட்டுப்பாடு!

எடை மட்டுமின்றி, பைகள் மற்றும் பெட்டிகளின் அளவுக்கும் ரயில்வே சீரான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் 100 செ.மீ நீளம், 60 செ.மீ அகலம், 25 செ.மீ உயரம் கொண்ட பைகளையே எடுத்துச் செல்லலாம்.

ஏசி வகுப்புகளில் இது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் நாற்காலி வகுப்புகளில் 55x45x22.5 செ.மீ அளவுக்கு அதிகமான சாமான்கள் அனுமதிக்கப்படாது. இந்த அளவை மீறும் பைகளை பிரேக் வேனில் அனுப்ப வேண்டும். இதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான விதிகள் என்ன?

சிறிய குழந்தைகளுக்கான சாமான்களுக்கும் தனி விதிகள் உள்ளன. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தனித்தனி பைகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 5 முதல் 12 வயதுக்குள் உள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு வழங்கப்படும் எடையின் பாதி அளவுக்கு சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுள்ளனர். இருப்பினும், இது அதிகபட்சமாக 50 கிலோ எடையைத் தாண்டக்கூடாது எனவும் ரயில்வேத் துறை தெரிவிக்கிறது.

முன்கூட்டியே திட்டமிடுங்கள் – சிக்கலில்லாத பயணம் உறுதி!

விமான பயணங்களில் போலவே, இந்திய ரயிலிலும் சாமான்களுக்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த விதிகளை மீறினால் கூடுதல் கட்டணமும், இடையூறும் ஏற்பட்டுவிடும்.

எனவே பயணிகள், தங்களது வகுப்பின்படி எடையும் அளவையும் சரிவர பரிசீலித்து, சாமான்களை முன்கூட்டியே சீரமைத்து எடுத்துச் செல்ல திட்டமிடுவது நல்லது. இது உங்கள் பயணத்தை சிரமமின்றி, நேரடியாகவும், வசதியாகவும் மாற்றும்.