திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி கூலி தொழிலாளி. இவரது மகன் பூவரசன் (17) ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

வழக்கம்போல நேற்று பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீட்டுக்குச் செல்லாமல் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடைமேடையில் நின்றிருந்த நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை நோக்கி வந்த மின்சார ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பூவரசன் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குப்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.