பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பீகாரை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரு, ஐடி மையமாக விளங்குகின்ற நிலையில், வெளிமாநிலத்திலிருந்து வேலைக்காக வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண், தனது குடும்பத்துடன் கேரளா மாநிலத்திற்கு வேலைக்காக சென்றிருந்தார். ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றிய இவர், சீசன் முடிவடைந்ததையடுத்து பீகாருக்கு மீண்டும் திரும்பிய நிலையில், பெங்களூர் வழியாக பயணித்துக்கொண்டிருந்தார். நேற்று இரவு பெங்களூரில் இளம்பெண் தனது சகோதரருடன் ஹோட்டல் தேடி சென்றபோது, அவர்களை தாக்கி இளம்பெண்ணை தனியாகப் பிரித்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள பொதுமக்கள் விரைந்து சென்று அந்த வாலிபர்களை பிடித்து, சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். இருவரின் அடையாளங்கள் மற்றும் பிற விவரங்களை பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம், பெங்களூரில் வெளி மாநிலத்திலிருந்து வருவோருக்கு ஏற்படும் பாதுகாப்பு சவால்கள் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
