உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடிய கணவனை, அவரது 6 வயது மகளின் வாக்குமூலத்தை வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  மீரட் நகரில் வசிப்பவர் சாகிப். ஈ-ரிக்‌ஷா ஓட்டும் இவர், தனது மனைவி கவுஷர் மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கவுஷர் தனது வீட்டிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது கழுத்து பேப்பர் கட்டரால் கொடூரமாக அறுக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்து வந்த சாகிப், மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். அவரது அழுகையைப் பார்த்த அங்கிருந்த மக்கள், குற்றவாளி யாரோ வெளியாள் என்று நம்பினர். மீரட் எஸ்.பி (சிட்டி) விநாயக் கோபால் போஸ்லே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சாகிப்பின் இரு மகள்களும் அழுதுகொண்டிருந்தனர். அவர்களைத் தரையில் அமர்ந்து அரவணைத்துத் தேற்றிய எஸ்.பி, மெல்ல பேச்சு கொடுத்தார். அப்போது சிறுமிகள் சொன்ன தகவலில் அவருக்குச் சந்தேகம் எழுந்தது.

தொடர்ந்து பெண் ஆய்வாளர்கள் மூலம் அந்தச் சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, “அப்பா காலையில் அம்மாவுடன் இருந்தார். அவர் சென்ற பிறகுதான் அம்மா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். யாராவது கேட்டால் திருடன் வந்ததாகச் சொல்லும்படி அப்பா மிரட்டினார்” என சிறுமிகள் உண்மையை உடைத்தனர்.

சிறுமிகளின் வாக்குமூலத்தை அடுத்து சாகிப்பை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில், சாகிப்பிற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதனை மனைவி கவுஷர் எதிர்த்ததால் ஆத்திரத்தில் பேப்பர் கட்டரால் அவரது கழுத்தை அறுத்துக் கொன்றதும் தெரியவந்தது. பிணத்தின் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு நாடகமாடிய கொலையாளி கணவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.