மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், உண்மைகளை மறைத்து விதிகளை மீறியதாக 6 மருத்துவர்கள் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2024 ஜூன் மாதம், மும்பை கோவண்டி பகுதியில் உள்ள ஷிதலா மருத்துவமனையில் நஜ்மா ரிஸ்வான் ஷேக் (27) என்ற இளம்பெண் சாதாரண மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட திடீர் பாதிப்பால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமலும், பிரேதப் பரிசோதனை செய்யவிடாமல் தடுத்தும் மருத்துவமனை நிர்வாகம் உடலை அடக்கம் செய்ய ஒப்படைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜே.ஜே மருத்துவமனை நிபுணர் குழு நடத்திய தீவிர விசாரணையின் அறிக்கை தற்போது வெளியாகியதை அடுத்து, இந்த 6 மருத்துவர்கள் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்த மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கையில், “இளம்பெண்ணின் இறப்புச் சான்றிதழில் மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘நுரையீரல் இரத்த உறைவு’ என்ற மருத்துவர்களின் விளக்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்த மரணத்தை எந்த வகையிலும் சாதாரணமான அல்லது இயற்கையான மரணம் என்று கூற முடியாது” என அதிரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, காசநோய் பாதிப்பால் குழந்தை பாக்கியம் தள்ளிப்போன நஜ்மாவுக்கு, கர்பப்பையில் குறைபாடு இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கடந்த 2024 ஜூன் 21 அன்று அறுவை சிகிச்சை நடந்தபோது, திடீரென ஆபரேஷன் தியேட்டருக்குள் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. நர்ஸுகளும் வார்டு ஊழியர்களும் இரத்தக் கறை படிந்த துணிகளுடன் வெளியே ஓடி வந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் நஜ்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மருத்துவ அலட்சிய வழக்குகளில் நிபுணர் குழுவின் அறிக்கை இல்லாமல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என்ற விதி உள்ளதால், இந்த முழு விசாரணை முடிவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகியுள்ளன. தற்போது ஜே.ஜே மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையில், உண்மைகளைத் திட்டமிட்டு மறைத்தல் மற்றும் அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவர்கள் ஆயிஷா அன்சாரி, ஜஸ்டின் பிரதர்ஸ், நேகா சேத்தியா, யோகேஷ் கேதானி, அர்ஜுன் மற்றும் வாசுதேவ் கேதானி ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
