ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தையே மிஞ்சும் வகையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது சொந்த மகனையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதாவது  கங்கம்மா என்ற பெண்ணிற்கும், தருகப்பா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த கங்கம்மாவின் 15 வயது மகன் வீரேந்திரா, தாயின் நடத்தையைக் கண்டித்ததோடு வீட்டில் தொடர்ந்து சண்டையிட்டும் வந்துள்ளான்.

இதனால் தங்கள் ரகசியம் ஊருக்குள் தெரிந்து அசிங்கமாகிவிடுமோ என்று பயந்த கங்கம்மா, கள்ளக்காதலன் தருகப்பாவுடன் சேர்ந்து தன் சொந்த மகனையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சிறுவனின் உடலை ஊருக்கு வெளியேயுள்ள மயானத்தில் ரகசியமாகப் புதைத்துவிட்டு, தன் மகன் காணாமல் போய்விட்டதாக நாடகமாடி போலீசில் புகாரும் கொடுத்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் தொய்வு இருப்பதாகக் கூறி, கங்கம்மா உயர் நீதிமன்றத்தை நாடி நாடகமாடியதால், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு ‘சிறப்பு விசாரணைக் குழுவிடம்’ (SIT) ஒப்படைக்கப்பட்டது. எஸ்.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, கங்கம்மா மற்றும் தருகப்பாவின் போன் கால் ரெக்கார்டுகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களை வைத்து அவர்களின் கள்ளத்தனத்தை உடைத்தனர்.

இறுதியில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, வருவாய்த்துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் முன்னிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த அதிர்ச்சி தரும் கொலை வழக்கில் கள்ளக்காதலன் தருகப்பாவை போலீஸார் கைது செய்துள்ளதோடு, கொடூரத் தாய் கங்கம்மாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.