நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்துள்ளனர். ஏற்கெனவே மின்னஞ்சல் மூலம் நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், நேற்று (நவம்பர் 15) சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் இந்த மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
இது குறித்து போலீசார் உடனடியாகச் சோதனை நடத்தி, அந்த அழைப்பு வந்த எண்ணை வைத்து விசாரித்தபோது, போனில் பேசி மிரட்டல் விடுத்த பெண்ணின் பெயர் ராதா (34 வயது) என்றும், சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ராதாவை பிடித்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணைப் பிடித்த போலீசார், மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். நடிகரின் வீட்டிற்குத் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மிரட்டலுக்குக் காரணம் மனநலப் பிரச்சினைதான் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
