பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தபோது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ரகசியத் தகவல்களை அவரிடம் பகிர்ந்துகொண்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
முன்னாள் சிஐஏ ஆய்வாளர் லாரி ஜான்சன் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரானுடன் விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் அவர்கள் அணு ஆயுதங்களை உருவாக்கக்கூடும் என்று இஷாக் தார் கூறியதாகவும், இதைக் கேட்டு மார்கோ ரூபியோ அதிர்ச்சியடைந்ததாகவும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகப் பணியாற்றி வரும் வேளையில், அமெரிக்க காங்கிரஸிலும் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே முற்றிலுமாக மறுத்துள்ளன. ஜூன் 2-ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்றும், ஈரானால் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் மார்கோ ரூபியோ பதிலளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும், இரு அமைச்சர்களின் சந்திப்பில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று அதிகாரப்பூர்வமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 440 கிலோகிராம் யுரேனியத்தை ஈரான் வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தரப்பு இந்த விவகாரம் குறித்து இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
