சீனாவில், சமூக வலைத்தளங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களைக் கொண்டு ‘செலிபிரிட்டி’ போல வலம் வந்த ‘சுடூ’ (Chutou) என்ற 8 வயது பார்டர் கூலி (Border Collie) இன நாய், திருடப்பட்டு வெறும் 25 டாலருக்கு (சுமார் ₹2,300-க்கு ) நாய் இறைச்சி உணவகம் ஒன்றிற்கு விற்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பிரபல டிராவல் இன்ஃப்ளூயன்சரான குவோ என்பவர் ஜார்ஜியாவிற்குச் சுற்றுலாச் சென்றிருந்த வேளையில், சீனாவில் இருந்த அவரது பெற்றோரின் வீட்டில் இருந்து இந்த நாய் மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நாயைக் கடத்தியதை அறிந்த குவோ, தனது பயணத்தைப் பாதியில் ரத்து செய்துவிட்டு உடனே சீனா திரும்பினார்.
அதீத தேடுதலுக்குப் பின் நாய் திருடனைக் கண்டுபிடித்த குவோ, பணத்தைக் கொடுத்துத் தனது நாயை மீட்க முயன்றார். ஆனால், அதற்குள் அந்த நாய் உணவகத்திற்கு விற்கப்பட்டுவிட்டதாகத் திருடன் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றிப் பதிலளித்துள்ளார். மேலும், “உன் நாய் இறந்துவிட்டது, அதனால் கத்துவதை நிறுத்து. நான் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை” என அவர் குவோவை மிரட்டியுள்ளார்.
பதறிப்போன குவோ அந்த உணவகத்திற்குச் சென்றபோது, நாய் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவும் அதன் முடிகள் குப்பையில் வீசப்பட்டுவிட்டதாகவும் கசாப்பு கடைக்காரர் கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் நெஞ்சையும் உடைத்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விலங்கு வதைக்கு எதிராகச் சீனாவில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
