உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், 33 வயதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தனது செல்லப் பிராணியான லேப்ரடார் ரக நாய்க்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகில் அரோரா என்ற அந்த வாலிபர், தனது பெற்றோரின் மருத்துவச் செலவுக்காகச் சொந்த வீட்டை விற்ற பிறகும், தீராத கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு விருந்துக்குச் செல்ல வேண்டிய நிகில் வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து கதவை உடைத்துப் பார்த்தபோது நிகில் மற்றும் அவரது நாய் ‘பிரேமி’ ஆகிய இருவரும் சடலமாகக் கிடந்தனர். ​போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தானியங்களைப் பாதுகாக்கப் பயன்படும் வீரியமிக்க சல்பஸ் (Sulphas) மாத்திரைகளை மோரில் கலந்து, முதலில் தனது உயிருக்கு உயிரான நாய்க்குக் கொடுத்துவிட்டு, அதன் பின்னர் நிகிலும் அதனை அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தான் இறந்த பிறகு தனது நாயைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள் என்ற கவலையில், அதன் மீது கொண்ட அதீத அன்பால் நிகில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீஸார் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.