தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள நடிகை கஸ்தூரி, இது உண்மையான பொங்கல் பரிசு அல்ல, வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து மக்களுக்கு அளிக்கப்படும் “மறைமுக தேர்தல் லஞ்சம்” என்று சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது போதிய நிதி வழங்காமல், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் பெரிய தொகையை அறிவிப்பது அரசியல் ஆதாயத்திற்கானது என்றும், மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே கொடுத்து திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பையும் ஒரு “நாடகம்” என்று விமர்சித்த கஸ்தூரி, அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தணிக்கவே இத்தகைய அறிவிப்புகள் அவசர அவசரமாக வெளியிடப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
பீகார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையோடு ஒப்பிடுகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு எவ்வித தொலைநோக்குப் பார்வையும் அற்றது என்றும், வெறும் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
