தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியைப் பறிக்க ஆர்வமாக உள்ளது.

இதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள விஜய், கட்சிக்குத் தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். பிப்ரவரி 7-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தவெக சார்பில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்குப் பட்டியலிடப்பட்டுள்ள 184 சின்னங்களிலிருந்து, தங்களுக்கு விருப்பமான 5 முதல் 10 சின்னங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தது.

சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காகத் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திற்குக் குறிப்பிட்ட சில சின்னங்கள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், தற்போது ‘மோதிரம் சின்னம்’ ஒதுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தவெக தரப்பால் கேட்கப்பட்ட ‘ஆட்டோ சின்னம்’, கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்குச் சென்றுவிட்டதால் அதைத் தவெக-வால் பெற முடியவில்லை.

விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் என்று சின்னங்கள் கேட்கப்பட்ட நிலையில், ‘மோதிரம்’ சின்னமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றில் இந்தக் கட்சிக்கான சின்னத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.