இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ஒரு பேட்டியில், கடந்த சில ஆண்டுகளாகத் தனக்கான சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், அதற்குத் திரைத்துறையில் இருக்கும் சில அதிகார மையங்களே காரணம் என்றும் வேதனையுடன் கூறியிருந்தார். திறமையானவர்களை விட, அதிகாரம் படைத்தவர்களே எதையும் தீர்மானிக்கிறார்கள் என்பது ரஹ்மானின் கருத்து. இதற்கிடையில், இந்தி தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவர், ரஹ்மான் தன்னிடம் ஒரு பேட்டியின் போது ‘வந்தே மாதரம்’ பாட மறுத்துவிட்டார் என்று பதிவிட, அது பெரிய சர்ச்சையானது. ரஹ்மானின் தேசப்பற்றைக் கேள்வி எழுப்பும் விதமாக அந்தப் பதிவு இருந்தது.

​இந்த விமர்சனத்திற்குப் பாடகி சின்மயி உடனடி பதிலடி கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடலை விரும்பிப் பாடுபவர் என்றும், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கூட அவர் அந்தப் பாடலை கம்பீரமாகப் பாடியதையும் ஆதாரத்துடன் சின்மயி சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பேட்டியின் போது அவருக்குக் குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது பாடத் தோன்றாமல் இருந்திருக்கலாம், அதை வைத்து அவரது தேசப்பற்றைக் குறை சொல்லக் கூடாது என்று சின்மயி விளக்கியுள்ளார். ரஹ்மான் சொன்னது போலவே, அவரைத் தேவையில்லாமல் விமர்சிப்பதைப் பார்க்கும் போது சமூகம் தவறான பாதையில் செல்வது புரிகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.