ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதையடுத்து, மே 7 முதல் மே 10 வரை 88 மணி நேரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடைபெற்றது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களும் அடங்கும் எனக் கூறப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூட 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என குறிப்பிட்டார்.

ஆனால், அவை இந்திய விமானங்களா அல்லது பாகிஸ்தான் விமானங்களா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. இதற்கிடையே, இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தான் சார்ந்த 5 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும் ஒரு பெரிய விமானத்தையும் வீழ்த்தியதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில பத்திரிகை அமெரிக்க அரசிடம் “F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?” என கேள்வி எழுப்பியது. இதற்கு அமெரிக்கா நேரடி பதில் அளிக்க மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக, “F-16 விமானங்கள் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தான் அரசிடம் கேளுங்கள்” என தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானங்களை வழங்கியுள்ளது. ஒப்பந்தத்தின் படி, அந்த விமானங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் 24/7 அடிப்படையில் பாகிஸ்தானில் கண்காணித்து வருகின்றன. அப்படியிருக்க, F-16 குறித்த விவரங்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது.