சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக, இந்தியாவுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் முன்னாள் வெளிவிவகார மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூட இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: “எங்கள் தண்ணீரை தடுத்து நிறுத்துவதாக இந்தியா முயற்சி செய்தால், பாகிஸ்தானின் நீரை ஒரு சொட்டு கூட பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் தெரிவிக்க விரும்புகிறேன். சிந்து நதி நீர் எங்கள் உயிர்நாடி. அதை கைப்பற்ற யாரேனும் முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” எனக் கூறினார்.
மேலும் அவர், “இதுபோன்ற செயலை இந்தியா செய்ய நினைத்தால், மீண்டும் ஒருமுறை உங்கள் காதுகளைப் பிடித்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். பாகிஸ்தான் எப்போதும் தனது உரிமையை காக்கும்; எங்கள் தண்ணீரை பறிக்க யாருக்கும் அனுமதியில்லை” என எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்த மிரட்டல் உரை, இந்தியா-பாகிஸ்தான் உறவை மீண்டும் பதற்றத்திற்கு தள்ளியுள்ளது.
