வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த ஆடம்பர கோல்ஃப் மைதான திட்டத்தை, வியட்நாமை சேர்ந்த Kinhbac City நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு 5 மில்லியன் டாலர் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தம், வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் ஒரு சதுர மீட்டருக்கு 12 முதல் 30 டாலர் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளதுடன், நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து விவசாயிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை என்றும் கூறியுள்ளனர்.

உதாரணமாக, ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு 3,200 டாலர் மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வாழைப்பழம், லாங்கன் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நிறைந்திருந்த 990 ஹெக்டேர் நிலம் முழுவதும் இப்போது ஆடம்பர விளையாட்டுக்காக மாற்றப்படுவது பல தரப்பினரின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.