சிலி நாட்டில் விஞ்ஞானிகள் 74 மில்லியன் (7.4 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களுடன் சேர்ந்து வாழ்ந்த மிகச் சிறிய பாலூட்டியின்  (mammal) புதைபடிவத்தை கண்டுபிடித்துள்ளனர்.

தென் அமெரிக்காவின் மாகெல்லன் பகுதியில் உள்ள ரியோ டி லாஸ் சைனாஸ் பள்ளத்தாக்கில், எலியை விடச் சிறியதாக 40 கிராமுக்கும் குறைவான எடையுள்ள பாலூட்டி  (mammal) உயிரினத்தின் தாடை எலும்பு மற்றும் கடைவாய்ப்பல் பாகங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

இந்த ஆய்வை சிலி பல்கலைக்கழகம் மற்றும் மில்லினியம் நியூக்ளியஸ் ஆராய்ச்சி மையம் இணைந்து மேற்கொண்டுள்ளன. இதன் முடிவுகள் பிரிட்டிஷ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் கூறுவதாவது, டைனோசர்களுடன் வாழ்ந்த இந்த பாலூட்டி, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், இது பிளாட்டிபஸைப் போல முட்டையிடும் உயிரினமாகவோ அல்லது கங்காருவைப் போல தனது உடலில் பை போன்ற பகுதியில் குஞ்சுகளை வளர்த்த விலங்காகவோ இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதன் பற்கள் மூலம், இது கடினமான காய்கறிகள் அல்லது நண்டுகளை உண்ணும் தன்மை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த அரிய புதைபடிவு கண்டுபிடிப்பு, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.