தலைநகர் டெல்லியின் துவாரகா மற்றும் உத்தம் நகர் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் நடக்கும் இந்த வினோதத் திருட்டு சம்பவம் இப்போது வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே, விநியோகஸ்தர்களால் கடையின் வாசலில் இறக்கி வைக்கப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமுல் பால் கிரேட்டுகளை, ஒரு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் லாவகமாகத் திருடிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து, மிகச் சாதாரணமாகத் தனது ஆட்டோவில் பால் கிரேட்டுகளை ஏற்றிச் செல்லும் அந்த நபரின் துணிச்சல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தத் திருட்டுத் தொடர் கதையாகி வருகிறது.  தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வைரலாகி வரும் இந்தச் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள், “இவ்வளவு கேமராக்கள் இருந்தும் திருட்டுப் பயம் இல்லாமல் இருக்கிறார்களே” எனத் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் புகார்கள் அளிக்கப்பட்டாலும், இன்னும் திருட்டு குறையவில்லை என்பதே அந்தப் பகுதி கடைக்காரர்களின் கவலையாக உள்ளது. பாதுகாப்பான நகர் என்று சொல்லப்படும் இடத்திலேயே இப்படிப் பட்டப்பகலில் நடக்கும் துணிகரத் திருட்டு இப்போது பேசுபொருளாகியுள்ளது!