ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்நாட்டின் உயரிய அதிகார அமைப்பான ‘நிபுணர்கள் சபை’ புதிய தலைவரை ஒருமனதாகத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தாக்குதல்களில் தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகவும் புதிய தலைவரின் பெயரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் குறிவைப்போம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது ஈரானுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

புதிய உச்ச தலைவருக்கான போட்டியில் அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியின் பெயர் பலமாக அடிபடுகிறது. 56 வயதான இவர், ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் மற்றும் தீவிரமான மதக் கொள்கை உடையவர் எனக் கருதப்படுகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், கோம் நகரில் உள்ள நிபுணர்கள் சபையின் கட்டிடம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, சபையின் தலைமைச் செயலாளர் மூலமாகப் புதிய தலைவரின் பெயர் முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.