நடிகர் விஜய் தனது அரசியல் உரையில் ஆளுங்கட்சியான திமுகவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்குத் தாராளமாக அனுமதி வழங்கும் தமிழக அரசு, தனது கட்சிக்கு மட்டும் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுவதாகச் சாடினார். “இதற்குப் பெயர்தான் ஆங்கிலத்தில் SOP (Standard Operating Procedure) என்பார்கள். ஆனால், தற்போதைய தமிழகச் சூழலில் அது ‘Stalin Sir Operating Procedure’-ஆக மாறிவிட்டது” என்று எள்ளலாகக் குறிப்பிட்டு நிர்வாகத் திறமையின்மையைச் சுட்டிக்காட்டினார்.
தமிழகம் எப்போதும் டெல்லிக்குக் கட்டுப்படாது, அதாவது ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறுவதைக் குறிப்பிட்ட விஜய், தற்போதைய சூழலில் தமிழகமே அவுட் ஆஃப் கன்ட்ரோலில் தான் இருப்பதாகச் சீறினார். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை என ஒட்டுமொத்த அரசாங்கமே கட்டுப்பாட்டை இழந்து தடுமாறுவதாகக் குற்றம் சாட்டினார். “தமிழக மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால், முதலில் காவல்துறைக்கு ஒரு நிரந்தர டிஜிபியை நியமியுங்கள்” என்று நேரடியாகவே முதல்வருக்குப் பகிரங்கச் சவால் விடுத்துத் தனது உரையை முடித்தார்.
