பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அசாம், மறைந்த புகழ்பெற்ற கவ்வாலி இசை மேதை நுஸ்ரத் ஃபதே அலி கானின் புகழ்பெற்ற பாடலை பாடுவது போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. “உஸ்தாத் பாபர் நுஸ்ரத்” என்ற தலைப்பில் இணையத்தை உலுக்கி வரும் இந்த வீடியோ, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், சல்மான் அலி ஆகா மற்றும் நசீம் ஷா ஆகியோருக்குக் காட்டப்பட்டது. தத்ரூபமாக பாபர் அசாமின் குரலை ஒத்திருந்த அந்த ஏஐ வீடியோவை ஒன்றாகப் பார்த்த மூவரும் தங்களது நகைச்சுவையான எதிர்வினைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த வீடியோவைப்பார்த்து உடனே சிரித்தபடி மறுப்பு தெரிவித்த பாபர் அசாம், “நானும் பாடுவேன், ஏன் நான் பாடக்கூடாதா? ஆனால் இந்த வீடியோவில் இருப்பது என்னுடைய உண்மையான குரல் அல்ல, இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார். மேலும், அந்த ஏஐ பதிப்பை விட தானே நிஜத்தில் இன்னும் சிறப்பாகப் பாடுவேன் என்றும் அவர் ஜாலியாகக் கிண்டலடித்துள்ளார். சமீபகாலமாகவே தனது குரலைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு ஏஐ பாடல்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ச்சியாக உலா வருவதாகவும் அவர் சக வீரர்களிடம் சுட்டிக்காட்டினார்.
Babar Azam reacting to his AI-made song. 🤣
– Funny reactions from Salman Ali Agha and Naseem Shah as well. 😁 pic.twitter.com/GuJuJFTgP6
— Sheri. (@CallMeSheri1_) June 1, 2026
அப்போது பாபர் அசாமுடன் இருந்த சக வீரர்களான சல்மான் அலி மற்றும் நசீம் ஷா ஆகியோரும், அந்த ஏஐ குரலை பாபர் அசாமுடன் ஒப்பிட்டு அவரைக் கலாய்த்து தள்ளினர். இந்த கலகலப்பான சம்பவம் பாகிஸ்தான் அணியினரிடையே ஆடுகளத்திற்கு வெளியே ஒரு லேசான மற்றும் மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 94 பந்துகளில் 69 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்த பாபர் அசாம், தற்போது இந்த ஏஐ வீடியோ மூலமாக இணையத்திலும் ட்ரெண்டாகி வருகிறார்.
