பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில் இன்று நடைபெற்ற ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், முகமது அமீர் மற்றும் ஃபஹீம் அஷ்ரப் இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்டத்தின் 17-வது ஓவரை வீசிய ராவல்பிண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், தனது துல்லியமான பந்துவீச்சால் ஃபஹீம் அஷ்ரப்பை அவுட் செய்தார்.

விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் அநாகரீகமாகச் செயல்பட்ட அமீர், அவுட்டாகி வெளியே சென்ற ஃபஹீமைப் பார்த்து “உடனே வெளியே போ” (Get out) என ஆக்ரோஷமாகச் சைகை காட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஃபஹீம் அஷ்ரப், கையில் இருந்த பேட்டைத் தூக்கிக் கொண்டு அமீரை அடிக்கப் பாய்ந்தது மைதானத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட சக வீரர்களும் நடுவர்களும் உடனடியாக இருவருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்தனர். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், பிஎஸ்எல் தொடரில் இதுபோல வீரர்கள் மோதிக்கொள்வது விளையாட்டின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.