அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் உருவாக்கிய ரகசிய எக்செல் ஷீட் காரணமாக, மேலாளர் ஒருவர் தனது கீழ் வேலை செய்யும் ஊழியரின் தொழில் வாழ்க்கையை அழிக்கப்போவதாக மிரட்டிய விசித்திரமான சம்பவம் ரெடிட் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் பகிர்ந்துள்ள தகவலின்படி, அவரது குழுவில் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியருக்கும் அங்குள்ள மற்ற ஊழியர்களுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

மேலும் மற்றவர்கள் தன்னைப்பற்றி தவறாகப் பேசுவதாகவும், தவறாக நடந்துகொள்வதாகவும் நினைத்த அந்தப் பெண், தன்னைச் சுற்றியுள்ள ஊழியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு நேராக “என்னை விசித்திரமாகப் பார்க்கிறார்”, “முதுகிற்குப் பின்னால் பேசுகிறார்” போன்ற தனிப்பட்ட கருத்துகளுடன் ஒரு ரகசிய எக்செல் ஆவணத்தைப் பராமரித்து வந்துள்ளார்.

இதனால் ஒருநாள் அந்தப் பெண் ஊழியர் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற பிறகு, மேலாளர் தற்செயலாக அந்த எக்செல் ஷீட்டைக் கண்டறிந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மேலாளர், அந்தப் பெண்ணின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து வேலை செய்யும் ஊழியரை நோக்கி, நீங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாகக் கூறி சத்தமிட்டுள்ளார். மேலும், “இந்த எக்செல் ஷீட் பிரச்சினையில் ஏதேனும் ஒரு இடத்தில் எனது பெயர் வந்தால், உனது ஒட்டுமொத்த தொழில் வாழ்க்கையையும் அழித்துவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் அந்த எக்செல் ஷீட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய அந்த ஊழியருக்கு, இந்த அச்சுறுத்தல் குறித்து உடனடியாக மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் மின்னஞ்சல் மூலம் ஆதாரங்களுடன் புகாரளிக்குமாறும், இருக்கையை மாற்றுமாறு கோருமாறும் இணையவாசிகள் பலரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.