ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் முகோனோ பகுதியில், ரயில் வரும் எச்சரிக்கைகளையும் மீறி பள்ளி மாணவர்களுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று தண்டவாளத்தை வேகமாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் ஒரு பேருந்தில் சுற்றுலாச் சென்றுள்ளனர். அந்தப் பேருந்து முகோனோ பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்க முயன்றபோது, தூரத்தில் ரயில் வருவது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்தின் ஓட்டுநர் ரயிலின் வேகத்தைக் கணிக்காமல், அதற்குள் தண்டவாளத்தைக் கடந்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் பேருந்தை வேகமாக முன்னோக்கிச் செலுத்தியுள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்த ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில் பேருந்து தூக்கி வீசப்பட்டுச் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் பேருந்தில் இருந்த பள்ளி ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் அலறினர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைத்துள்ளதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
