செம்பூர் வாஷி நாகா பகுதியில் உள்ள காளி மாதா கோயிலில், காளி தேவியின் சிலை அன்னை மேரியின் உடை அலங்காரத்தில் காணப்பட்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) ஏற்பட்ட இந்த நிகழ்வு, பக்தர்கள் மற்றும் உள்ளூர் மத அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து காவல்துறை தலையீட்டுக்கு வழிவகுத்தது.

கோயிலுக்கு வந்த சில பக்தர்கள் முதலில் சிலையின் மாற்றப்பட்ட தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பூசாரி ரமேஷிடம் விளக்கம் கேட்டபோது, “தெய்வம் கனவில் தோன்றி, அன்னை மரியாள் வடிவில் அலங்கரிக்குமாறு கட்டளையிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விளக்கம் பக்தர்களை ஏற்க விடாது, பலரும் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலாக இது அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினர். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக அவர்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பூசாரி ரமேஷை சில உள்ளூர் குழுவினர் ஆர்.சி.எஃப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், “சிலர் பணம் கொடுத்து அல்லது செல்வாக்கு செலுத்தி பூசாரியிடம் இப்படிச் செய்ய வைத்திருக்கலாம்” என்ற குற்றச்சாட்டும் சில குடியிருப்பாளர்களிடம் இருந்து எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295A (மத உணர்வுகளை நோக்கமுடன் புண்படுத்துதல்) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட பூசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் மேலும் யார் யார் ஈடுபட்டிருக்கலாம், பின்னணியில் திட்டமிட்ட நோக்கம் உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.