பிரபல இந்திய ராப் பாடகரும், யூடியூபருமான அர்பித் பாலா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் பாட்டில் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாடகர் அந்த ரசிகரை நோக்கி எச்சரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள கிங்டம் கிளப் மற்றும் கிச்சனில் கடந்த மார்ச் 28 அன்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அர்பித் பாலா மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென மேடையை நோக்கி பாட்டிலை வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாடகர், உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு அந்த நபரைக் கடுமையாகச் சாடினார்.
வைரலாகும் வீடியோவில், அர்பித் பாலா மிகுந்த கோபத்துடன் அந்த நபரைக் கண்டறிந்து வாதிடுகிறார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற பாடகர், அந்த ரசிகரை நோக்கித் துப்பியதோடு, அந்தப் பாட்டிலைத் திருப்பி அவர் மீதே வீசினார். மேலும், பாதுகாப்புப் படையினரை அழைத்து அந்த நபரை உடனடியாக அரங்கை விட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
அந்த நபரைக் கண்டிக்கும் வகையில் பேசிய அர்பித் பாலா, “இங்க பாரு.. என்னாச்சு? நான் பயந்துட்டேன். இதையெல்லாம் உன் சகோதரி திருமணத்தில் வரதட்சணையாகக் கொடுத்துவிடு” என ஆவேசமாகத் தெரிவித்தார். பாடகரின் இந்தச் செயலுக்கு அங்கிருந்த சில ரசிகர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது. “கலைஞர்கள் மீது பொருட்களை வீசுவது கண்டிக்கத்தக்கது” என ஒரு தரப்பினரும், “பாடகர் அந்த ரசிகரை நோக்கித் துப்பியது மற்றும் தரக்குறைவாகப் பேசியது நாகரிகமற்ற செயல்” என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சுயாதீன கலைஞராகவும், ‘புஸ்ஸி கேங்’ (Fussi Gang) குழுவின் நிறுவனராகவும் அறியப்படும் அர்பித் பாலா, தனது நகைச்சுவையான வீடியோக்கள் மற்றும் ‘மஹாராணி’ போன்ற ஹிட் பாடல்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
