பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில், தனது காதலைப் பிரித்ததற்காகப் பழிவாங்கும் நோக்கில் 5 வயது சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்த கல்லூரி மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர். விபத்து என நம்பப்பட்ட முந்தைய கொலைகளும் இவரால் திட்டமிடப்பட்டவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து  காவல்துறை அதிகாரி உதய சங்கர் இது குறித்துக் கூறுகையில்,  ஹிராப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராகினி தேவி என்பவர், தனது 5 வயது மகள் அன்ஷிகா கடந்த மார்ச் 20-ம் தேதி காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்தார். தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 22-ம் தேதி அருகில் உள்ள வயல்வெளியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மாவட்ட எஸ்பி ஸ்வர்ண பிரபா தலைமையிலான தனிப்படை போலீஸார், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர். சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பிஏ (BA) மாணவி ஷில்பி குமாரி (22) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

கைது செய்யப்பட்ட ஷில்பிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் முறிந்தது. இதற்கு அன்ஷிகாவின் தாயார் ராகினி தேவிதான் காரணம் என ஷில்பி கருதியுள்ளார். மேலும், அன்ஷிகாவின் பெரியம்மா தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி அடி வாங்க வைத்ததாகவும் ஷில்பி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதற்காகப் பழிவாங்கத் துடித்த ஷில்பி, கொடூரமாக திட்டமிட்டார். சிறுமி அன்ஷிகாவைக் கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அவளது பெரியம்மா மீது சுமத்த நாடகமாடியுள்ளார். அதன்படி கொலை செய்வதற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றை ஆர்டர் செய்த ஷில்பி, போலீஸாரைத் திசைதிருப்ப சிறுமியின் சடலத்திற்கு அருகில் ரத்தக்கறை இல்லாத வேறொரு கத்தியை வைத்துள்ளார். உண்மையான கத்தியைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.

மேலும், சிறுமியின் பெரியம்மா பேசுவது போல போலி ஆடியோக்களைப் பதிவு செய்து, அதைத் திருடப்பட்ட செல்போன் மூலம் சமூக வலைதளங்களில் பரவச் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், தீவிர விசாரணையில் ஷில்பி சிக்கிக்கொண்டார். விசாரணையில் ஷில்பி அளித்த மற்றொரு வாக்குமூலம் போலீஸாரையே அதிரவைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை மாதம், தனது காதலன் நிதிஷின் தாத்தா தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதையும் ஷில்பி ஒப்புக்கொண்டார்.

அப்போது அது விபத்து என்று நம்பப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுவரை சுமார் 18 முறை தீ வைப்பு மற்றும் இதர குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, செல்போன் மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்துள்ள போலீஸார், ஷில்பியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.