ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, இந்தியாவில் மண்ணெண்ணெய் விற்பனை விதிகளில் மத்திய அரசு அதிரடித் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்த 60 நாட்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமையல் மற்றும் விளக்கு ஏற்றுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமித்து விநியோகம் செய்ய தற்காலிகமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு உஜ்வாலா போன்ற திட்டங்கள் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதால், மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய உலகளாவிய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, விநியோகச் சங்கிலியை விரைவுபடுத்த 2002-ஆம் ஆண்டு பெட்ரோலிய விதிகளிலிருந்து அரசு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மூலம் இந்த விநியோகம் நடைபெறும் என்றும், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் விதிமுறைகள் இதில் முறையாகப் பின்பற்றப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.