உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், 17 வயது சிறுமி ஒருவர் தனது தாய்மாமன்கள் மீது அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமியின் தந்தை தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில், ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தச் சிறுமியையும் அவரது 16 வயது தங்கையையும் தாய்மாமன்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து ஒரு மாமன் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொருவர் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் தனது 16 வயது தங்கையை மாமன்கள் பணத்திற்காக விற்றுவிட்டதாக அந்தச் சிறுமி பகீர் புகாரை முன்வைத்துள்ளார்.
தன்னையும் தனது தங்கையையும் மிரட்டி, தாங்கள் விருப்பத்துடனேயே வீட்டில் இருப்பதாக வீடியோ பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், துணிச்சலுடன் தனியாக வந்து காவலநிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பர்கேரா காவல்துறையினர், சிறுமியின் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டு அவரது வயதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் மைனர் என்பது உறுதியானால், இந்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
