இயக்குனர் பிரேம் குமார் நடிகர் கார்த்தி 27-வது படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
கடந்த ஏழாம் தேதி படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் டீசரை கிளர்வோட்டம் என குறிப்பிட்டு படக் குழுவினர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆன சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அன்பு தம்பி சூர்யா ஜோதிகா இணையரின் தயாரிப்பில் அன்பு சகோதரர் பிரேம் குமார் எழுதி இயக்கி அன்பு இளவல் கார்த்தி, அன்பு சகோதரர் அரவிந்த்சாமி அவர்களின் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
படத்திற்கு மெய்யழகன் என தூய தமிழ் பெயர் சூட்டி அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் என கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை கிளர்வோட்டம் என்று தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு எனது அன்பு பாராட்டுகளும், நன்றியும். ஒலி கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு என அனைத்தையும் தமிழில் குறிப்பிட்டு இருப்பது மிகச் சிறப்பு.
கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவுக்கு மிகச் சரியாக அமைந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி வியக்கிறேன். மற்ற மொழிகளில் இப்படியான கலைச் சொற்களை எளிதில் உருவாக்கி விட முடியாது. ஆனால் தமிழில் பொருள் பொதிந்த கலைச் சொற்களை உருவாக்க முடியும். இதற்காகவாவது திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமான நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன் என அதில் கூறியுள்ளார்.
