தமிழகத்தில் பீகார் கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மதுவே அடிப்படை காரணம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்ற வாக்கியம் இப்போது ஏட்டளவில்தான் உள்ளது என்பதற்குச் சான்றுதான் பீகார் தொழிலாளி குடும்பம் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு. வேலை தேடி நம்பி வந்த குடும்பத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து, மதுபோதையில் இந்தக் கொடூரத்தைச் செய்திருப்பதாகக் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஒரு பெண்ணை அடையத் தடையாக இருந்த குழந்தையைக் கொன்று, பின் அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் கொன்றதாக இந்தச் சம்பவம் முடிகிறது. மது அருந்துபவர்களை எத்தகைய கொடூரத்தையும் செய்யத் தூண்டும் என்பதே இச்சம்பவத்தின் சாராம்சம். பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவர்களையும் விட்டுவைக்காத இந்த மது போதை, ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் நிலவுவதால் தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார். அவர் அப்படிப் பேசிய மறுநாளே தமிழகத்தையே உலுக்கும் வகையில் இந்தக் கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
பெண்கள் அச்சமின்றி வாழ வேண்டுமானால், அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவசங்களை வழங்க மது வருவாயைத்தான் நம்பியிருக்க வேண்டும் என்பதில்லை; வருவாயைப் பெருக்க வேறு பல வழிகள் உள்ளன. இனியாவது தமிழக அரசு மதுவை அறவே ஒழிக்க முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
