தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வைக்கும் அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் (கே. பாலகிருஷ்ணன்) தவெக அரசுக்கு ஆதரவாக அதிரடி விளக்கமளித்துள்ளார். எந்தவொரு புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குச் செயல்படக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த முறை மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றிவிடவில்லை. அவருடைய ஆட்சியின் 5-வது ஆண்டில்தான் மிக அதிகமான வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. அதை என்னால் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுக் கூற முடியும்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “எந்தவொரு ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதற்குரிய அவகாசத்தை நாம் தர வேண்டும்; அந்தப் பொறுமை என்பது மக்களுக்கு மிகவும் தேவை” என்று தவெக அரசை அவசரப்பட்டு விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கும் விதமாகப் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நியாயமான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
