தமிழ்நாடு அரசியலில் இப்போது ஒரு புதிய அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தல் களம் முடிந்து புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி வீசும் வார்த்தைக் கணைகள் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. அந்த வகையில், மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவை நோக்கி அனல் பறக்கும் விமர்சனங்களை வீசியுள்ளார்.
கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “நடந்து முடிந்த தேர்தலிலேயே திமுகவை மக்கள் ஓரம் கட்டி பழிவாங்கி விட்டனர். பிறகு நாங்கள் ஏன் தனியாக அவர்களைப் பழிவாங்க வேண்டும்? கடந்த இத்தனை ஆண்டுகளில் நீங்கள் செய்த ஊழல்களையும், கொள்ளைகளையும் பார்த்துப் வெறுத்துப்போன மக்களே உங்களைத் தூக்கி வெளியில் எறிந்துவிட்டனர்” என்று கடுமையாகச் சாடினார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தியான திமுகவை ஒழிக்க வேண்டும் என்றே அதிமுகவைத் தொடங்கினர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆனால், தற்போது அந்தத் தீய சக்தியை விஜய் ஒழித்துக் கட்டிவிட்டார்” என்றார்.
திமுகவின் முக்கிய அடையாளமாக விளங்கும் அறிவாலயம் மற்றும் முரசொலி அறக்கட்டளையைக் குறிவைத்து அவர் பேசியதுதான் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. “இனிமேல் அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்குத்தான் விட வேண்டும். முரசொலி அறக்கட்டளையை யார் எந்தக் குடும்பம் கைப்பற்றுவது என்பதில்தான் அவர்களுக்குள்ளேயே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த அறக்கட்டளையைக் கைப்பற்றிவிட்டு, அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு அவர்கள் வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்” என்று கிண்டலாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசு என்பதை வலியுறுத்தினார். “ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி கிடைக்கும். வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம். ஆனால், எதிர்க்கட்சியினருக்கு ஊழல் மற்றும் கட்சி நிதி என்று சொன்னாலே கோபம் வந்துவிடுகிறது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
